கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு காமாட்சிபாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து விடுதலையானார். அவரது ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால் தற்போது அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து பல்லாரி மாவட்ட சிறைக்கு நடிகர் தர்ஷனை மாற்றக் கோரி சிறை நிர்வாகம் சார்பில் பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்பு நடைபெற்று வருகிறது.
அதே நேரத்தில் தர்ஷன் சார்பிலும் போர்வைகள், தலையணைகள் கேட்டு, அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த 2 மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது தர்ஷன் தரப்பில் ஆஜரான வக்கீல், அவரை பல்லாரி சிறைக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தார். இந்த கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டி வாதிட்டார்.