Offline
Menu
மெட்ரிகுலேஷன் முறையை ரத்து செய்ய தேவையில்லை – கல்வி அமைச்சர் ஃபட்லினா
By Administrator
Published on 09/15/2025 09:00
News

நிபோங் தெபால்,

மெட்ரிகுலேஷன் மற்றும் STPM ஆகிய இரண்டும் பல்கலைக்கழகச் சேர்க்கைக்கான தரச்சான்றுகளை பூர்த்தி செய்யும் அங்கீகரிக்கப்பட்ட முறைகள் என்பதால், மெட்ரிகுலேஷன் முறையை ரத்து செய்ய தேவையில்லை என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா தெரிவித்துள்ளார்.

“இரண்டு முறைகளுக்கும் தங்களுக்கான பலங்கள் உள்ளன. அவற்றை தொடர்ந்து மேம்படுத்தும் முயற்சிகளை கல்வி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் நலனும் கல்வித் தரமும் எப்போதும் அமைச்சகத்தின் முன்னுரிமையாகும்” என்றார் அவர்.

இது குறித்து அவர் MADANI Pre-University Congress 2025 இல் கலந்துகொண்டு உரையாற்றினார்.

“மெட்ரிகுலேஷனை ரத்து செய்ய வேண்டும் என சில தரப்புகள் முன்வைக்கும் விவாதங்களையும், கருத்துக்களையும் நான் கவனித்துள்ளேன். ஆனால் இந்த விஷயத்தை அளவுக்கு மீறி எடுத்துச் செல்ல வேண்டாம். இரண்டு முறைகளும் பல ஆண்டுகளாக நம் கல்வி அமைப்பின் அங்கமாக இருந்து வருகின்றன. அவற்றில் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பலங்கள் உள்ளன,” என அவர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சகம் மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் நலனில் முழுமையான கவனம் செலுத்தி வருவதோடு, மாட்ரிகுலேஷன் மற்றும் STPM ஆகியவற்றை காலம் காலமாக பெறப்படும் அனுபவங்கள் அடிப்படையில் மேம்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

அமைச்சகம் சமீபத்தில் ஆறாம் வகுப்பு (Form Six) திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், மாணவர் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் மாணவர் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதும் அடங்கும்.

இது தொடர்பாக, மலாயா பல்கலைக்கழக புதிய இளைஞர் சங்கம் (UMANY) அரசிடம் மெட்ரிகுலேஷனை ரத்து செய்து, பல்கலைக்கழகச் சேர்க்கைக்கான ஒரே அடிப்படை அளவுகோலாக STPM முடிவுகளைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.

அதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் ஃபட்லினா, “நாட்டின் இளைஞர்களுக்கான கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் மெட்ரிகுலேஷனும் STPM-மும் இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரிவினையை உருவாக்கும் தேவையற்ற விவாதங்களில் சிக்காமல், இரு முறைகளையும் மேம்படுத்துவதே சமூகத்திற்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினார்.

Comments