புதுடெல்லி:
நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், இந்தியா ₹1 லட்சம் கோடி (US$11.7 பில்லியன்) மதிப்பிலான கைப்பேசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. கைப்பேசி ஏற்றுமதியில் இது இந்தியாவுக்கு புதிய பாய்ச்சலாகக் கருதப்படுகிறது.
பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் உற்பத்தி ஆலைகள் இந்தியாவில் செயல்படத் தொடங்கியதால், ஏற்றுமதி விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளதாக துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் கைப்பேசி ஏற்றுமதி 55% அதிகரித்துள்ளது. அதில் மட்டும் 72% அமெரிக்காவுக்கே ஏற்றுமதியாகியுள்ளது. தற்போது அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐஃபோன்களில் பெரும் பகுதி இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாகும்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டிம் குக், கடந்த ஜூலையில், இந்தியா ஐஃபோன் உற்பத்தியில் முக்கிய தளமாக மாறி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். அதனை உறுதிப்படுத்தும் வகையில், நடப்பு நிதியாண்டில் இந்தியா கைப்பேசி ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், அமெரிக்காவுக்கான கைப்பேசி ஏற்றுமதி US$8.43 பில்லியன் வரை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது US$2.88 பில்லியன் மட்டுமே இருந்தது.
இதன் மூலம், ஆண்டுகளுக்கு இடையேயான ஏற்றுமதி மதிப்பில் 193% உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், மொத்த வளர்ச்சி விகிதம் 55% ஆக பதிவாகியுள்ளதாகவும் இந்திய கைப்பேசி மற்றும் மின்னணு சங்கம் (ICEA) தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஆப்பிள் ஐஃபோனுக்கு உயர்ந்திருக்கும் தேவை, இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக மாறியுள்ளது.