Offline
Menu
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 32 பேர் உயிரிழப்பு
By Administrator
Published on 09/29/2025 09:00
News

காசா,காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. அதேவேளை, ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பணயக் கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களால் காசா முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. இதுவரை சுமார் 65 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பல்வேறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் மத்திய மற்றும் வடக்கு காசாவில் இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். இதில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஐ.நா. சபையில் நேற்று பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக தொடங்கப்பட்ட போராட்டத்தை முடித்தே தீருவோம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments