ஹானாய்:
வியட்நாம் கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் 2.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், புவாலோய் புயல் தாக்கத்தை முன்னிட்டு இன்று அவசரமாக இடம்பெயர்த்தப்படுகின்றனர்.
மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றுடன் கடலில் உருவாகியுள்ள இந்த புயல், இன்று மாலை 7.00 மணியளவில் மத்திய வியட்நாம் கடற்கரை பகுதிகளை கடக்கும் என வானிலைத் துறை எச்சரித்துள்ளது. டா நாங் நகரில் 2.1 இலட்சம் பேர், ஹ்யூ நகரில் 32 ஆயிரம் பேர், இரும்பு உற்பத்தி மையமாக அறியப்படும் ஹா தின் மாகாணத்தில் 15 ஆயிரம் பேர் பள்ளிகள் மற்றும் மருத்துவ மையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் அங்கு நான்கு உள்நாட்டு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. புயல் பாதையில் சென்றிருந்த அனைத்து மீன்பிடிக் கப்பல்களும் கரைக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
“முந்தைய காஜிகி புயலில் எங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த புயலும் அப்படியே குறைவான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என நம்புகிறேன்,” என ஹா தின் நகரைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். வானிலை மையம், புயல் கடற்கரையை அடையும் போது மணிக்கு 133 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், பலத்த மழை, வெள்ளம், மண்சரிவு, கடலோர வெள்ளப்பெருக்கு போன்ற அபாயங்கள் உருவாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனிதனால் உண்டாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தால் புயல்கள் அதிக வலிமையுடன் உருவாகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.