கரூர்:
தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தில் போதுமான பாதுகாப்பு வழங்க காவல்துறை தவறிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் பேச்சாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டதே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என குறிப்பிட்டார்.
மேலும், “தவெக முன்னதாக நடத்திய நான்கு பிரசாரக் கூட்டங்களை காவல்துறை ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் ஆளுங்கட்சிக்கு மட்டுமே காவல்துறை முழுமையான பாதுகாப்பு வழங்குகிறது” என்று சாடினார்.
அதோடு, “பிரசாரக் கூட்டங்களுக்கு இடையே ‘ஆம்புலன்ஸ்’ வாகனங்கள் அடிக்கடி வருவது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. இதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் பிரசாரத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணை நடந்தபோது, பிரசாரத்தின் போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும், “கட்சித் தொண்டர்களை தலைவரே ஒழுங்குபடுத்த வேண்டும்” என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
அந் எச்சரிக்கைக்கு பின்னர், ஒரு வாரத்துக்குள் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.