கோலாலம்பூர்:
வேலை நேரத்துக்கு அப்பாலும், அலுவலகத்தைத் தாண்டியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் 24 மணி நேர பாதுகாப்புத் திட்டத்தை மலேசியா விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது, வேலை இடத்துக்கு வெளியே, அலுவலக நேரத்திற்குப் பிறகும் அல்லது தொலைதூரம் மற்றும் நெகிழ்வான வேலை நேர ஏற்பாட்டின் கீழும் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.
“வேலைப்பளு என்பது தொழிற்சாலை அல்லது அலுவலகக் கதவுடன் முடிந்துவிடுவதில்லை. நவீன சூழலில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள், வேலை செய்கிறார்கள் என்பதன் அடிப்படையில், இந்தத் திட்டம் ஊழியர்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கும்,” என பிரதமர் கூறினார்.
அவர், உலகச் சமூகப் பாதுகாப்புக் கருத்தரங்கு 2025-ஐத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பிரதமர் மேலும் குறிப்பிட்டதாவது, விபத்துகளும் காயங்களும் நேர அட்டவணைப்படி நிகழ்வதில்லை என்பதால், இந்தத் திட்டம் எல்லா நேரங்களிலும் பாதுகாப்பை வழங்கும்.
இதற்கான சட்டத் திருத்தங்கள் குறித்து மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், ஏற்கெனவே இவ்வாண்டு (2025) பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.