செப்டம்பர் 27 அன்று (சனிக்கிழமை) கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடைய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் யார் மீது குற்றம் என்பது குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. முழுமையான உண்மை, அதிகாரப்பூர்வ விசாரணைக்குப் பின்னரே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டததின் விற்பட்டு கிராமத்தைச் சேர்ந்த, தமிழக வெற்றிக் கழகம் கிளைச் செயலாளர் அய்யப்பன் (வயது 52) என்பவர் இன்று, திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலைக்கு முன் அவர் கரூர் சம்பவம் குறித்து மனவேதனையுடன் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் சம்பவ இடத்தில் இருந்து போலீசார் மீட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், “கரூர் மாவட்டத்தில் விஜய் வருகையில் போதிய பாதுகாப்பு இல்லை. நூதன முறையில் நெருக்கடி கொடுத்த செந்தில் பாலாஜி மூலமாக இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்று எழுதப்பட்டுள்ளது.
கரூர் நிகழ்வால் ஏற்பட்ட ஆதங்கமே அவரது இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி, கடிதத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.