புத்ராஜெயா :
பிலிப்பைன்சில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்துக்குப் பிறகு அந்நாட்டில் மனிதாபிமான பணிகளை மேற்கொள்ள மலேசியா 77 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு பேரிடர் உதவி மற்றும் மீட்பு (SMART) அணியை அனுப்பியுள்ளது என்று துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
தேசிய பேரிடர் மேலாண்மை குழுத் தலைவராகவும் உள்ள ஜாஹித், மீட்பு அணி இன்று காலை 9 மணிக்கு பேரிடர் பகுதிக்கு புறப்படுவதாகக் கூறினார். இந்த அணி நகர்ப்புற தேடல் மற்றும் மீட்பு (USAR) உபகரணங்கள், தொடர்பு அமைப்புகள், அவசர மருத்துவ வசதிகள், K9 நாய் பிரிவுகள் மற்றும் லாஜிஸ்டிக் வாகனங்கள் உள்ளிட்ட முழுமையான வசதிகளுடன் அனுப்பப்பட்டுள்ளது.
“அண்டை ஆசியான் நாடாகிய மலேசியா, பிலிப்பைன்சுக்கு மனிதாபிமான உதவி வழங்குவதற்காக SMART அணியை முழுமையான அமைப்புடன் அனுப்ப அனுமதி அளித்துள்ளது. இது மலேசியாவின் ஆசியான் ஒற்றுமை மீதான உறுதியையும், உயிர்களை காப்பாற்றவும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் நிலைநிறுத்தவும் உதவும் ஒரு நடவடிக்கையாகும்,” என்று அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.