சென்னை:
தாய்லாந்தின் பேங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட 9.5 கிலோ உயர் தர ‘ஹைட்ரோஃபோனிக்’ கஞ்சா சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் அனைத்துலக சந்தை மதிப்பு ₹9.5 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா, சாக்லேட் வடிவிலும் பதப்படுத்தப்பட்ட உணவு உறைகளுக்குள்ளும் மறைத்து கடத்தப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்தில், தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த வடஇந்தியத்தை சேர்ந்த இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் கொண்டுவந்த போதைப்பொருள் பொதிகளைப் பெற்று பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல வந்த மூன்றாவது நபரும் சிக்கியுள்ளார்.
சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தபோது, சந்தேகத்திற்கிடமான நடத்தை வெளிப்படுத்திய பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், அவர்களின் பெட்டிகளில் உணவுப் பொருட்களுக்குள் மறைக்கப்பட்டிருந்த கஞ்சா கைப்பற்றப்பட்டது.
அண்மையில் தாய்லாந்து மற்றும் துபாய் வழியாக சென்னைக்கு போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவதால், விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.