கோலாலம்பூர்,
கடந்த ஆண்டு டெலிகிராம் செயலி (Telegram) மூலம் வணிக நோக்கங்களுக்காக ஆபாச உள்ளடக்கங்களை (pornographic material) விற்றதாக ஒப்புக்கொண்ட பொதுப் பல்கலைக்கழக மாணவர் 24 வயதுடைய முகமட் ஐடில் அக்மல் அசார் என்பவருக்குச் சிப்பாங் அமர்வு நீதிமன்றம் RM10,000 ரிங்கிட் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதி அகமட் ஃபூவாட் ஓத்மான் இந்தத் தண்டனையை, 1998 தகவல் தொடர்பு பல்லூடகச் சட்டம் பிரிவு 233(2)(a)-ன் கீழ் வழங்கினார்.
இந்தச் சட்டப் பிரிவின் கீழ் அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்க முடியும்.
ஐடில், ‘@sanomanji89’ என்ற கணக்கைப் பயன்படுத்தி ஒரு ஆபாச வீடியோவை RM100 ரிங்கிட்டிற்கு டச் ‘ன் கோ (Touch ‘n Go) ரீலோட் குறியீடு மூலம் விளம்பரப்படுத்தி விற்றதை ஒப்புக்கொண்டார்.
மலேசிய தகவல் தொடர்பு பல்லூடக ஆணையத்தின் (MCMC) அதிகாரி ஒருவர் வாங்குபவர் போல் நடித்து இந்தக் குற்றத்தைக் கண்டுபிடித்தார்.
சமூகத்திற்கு ஏற்படும் தீங்கைக் காரணம் காட்டி அரசுத் தரப்பு கடுமையான தண்டனையை வலியுறுத்தியது. இருப்பினும், ஐடிலின் வழக்கறிஞர் அவரது நிதிச் சிக்கல்கள், குடும்பச் சுமையைக் கருத்தில் கொண்டு குறைந்த தண்டனையை விதிக்கும்படி கேட்டுக் கொண்டார்.