குவந்தான்:
இருபது ஆண்டுகளாகக் காத்திருந்த ஒரு தமிழ்ப் பள்ளியின் கனவு, 2026 பட்ஜெட்டில் அதன் மறுகட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதுடன் நிறைவேறவுள்ளது.
SJKT லடாங் ஜெராம் பள்ளி முழுமையாக மீண்டும் கட்டப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நேற்றைய தினம் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் அறிவித்தார்.
குவந்தான் பைபாஸ் அருகில் அமைந்துள்ள இந்தப் பள்ளி, தற்போது ஒரு சொத்து மேம்பாட்டாளரின் நிலத்தில் இயங்கி வருகிறது. நில உரிமை உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகளின் காரணமாக, சுமார் 25 ஆண்டுகளாக மாணவர்கள் தற்காலிக வகுப்பறைகளில் கல்வி கற்றுவருகின்றனர்.
இந்த அறிவிப்பு “மிகவும் எதிர்பார்க்கப்பட்டது அத்தோடு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது ” என்று, பள்ளியின் நிர்வாகக் குழுத் தலைவர் டத்தோ கே. நடேசன் குறிப்பிட்டார்.
“பள்ளி தொடர்பாக பிரதமரே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நீண்டகாலமாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த இந்த பிரச்சினை இனி முழுமையாக தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்,”
என்று அவர் தெரிவித்தார்.
அவர் மேலும், “2026 பட்ஜெட்டின் கீழ் வளாகம் முழுமையாக மீண்டும் கட்டப்படும் என நிதி அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், இனி மேலும் தாமதங்கள் அல்லது பின்னடைவுகள் இருக்காது என நம்புகிறோம்,” என்றார்.
இந்த நீண்டகால பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுத்ததற்காக, துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ மற்றும் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ ஆகியோருக்கு அவர் நன்றியைத் தெரிவித்தார்.