பறவை மோதியதைத் தொடர்ந்து, சென்னையிலிருந்து மலேசியாவுக்கு புறப்பட்ட ஏர் ஏஷியா விமானம் அவசரமாக மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
தமிழக ஊடகத் தகவலின்படி, விமானி எடுத்த சாமர்த்தியமான முடிவினால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) நடைபெற்றது. அப்போது அந்த விமானத்தில் 190 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் அதில் ஒரு பறவை மோதியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, விமானி உடனடியாக தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொண்டு அனுமதி பெற்ற பிறகு, விமானத்தை பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.
பின்னர் விமான நிலைய ஆணைய பொறியாளர் குழு விமானத்தை முழுமையாகச் சோதனை செய்ததில், இன்ஜின் பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
சேதம் உடனடியாக சரிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், அனைத்து பயணிகளும் சென்னையில் உள்ள பல்வேறு தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டதாக ஏர் ஏஷியா நிறுவனம் தெரிவித்துள்ளது.