Offline
Menu
நாட்டை உலுக்கிய பெண் டாக்டர் தற்கொலை சம்பவம்: 4 பக்க கடிதத்தில் பரபரப்பு தகவல்
By Administrator
Published on 10/27/2025 14:00
News

மும்பை,மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் வத்வானி தாலுகாவை சேர்ந்த 28 வயது பெண் டாக்டர் ஒருவர், சத்தாரா மாவட்டம் பல்தான் நகரில் உள்ள துணை மாவட்ட அரசு மருத்துவமனையில் பணி செய்து வந்தார். இதற்காக பல்தானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனை அருகே உள்ள ஓட்டல் அறையில் அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உள்ளங்கையில் தற்கொலை குறிப்பை எழுதி வைத்திருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் பல்தான் நகர போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே மற்றும் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் உரிமையாளரின் மகனான சாப்ட்வேர் என்ஜினீயர் பிரசாந்த் பங்கர் ஆகியோர் மீது பலாத்காரம் மற்றும் உடல், மனரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டி இருந்தார். இதன்பேரில் 2 பேரின் மீதும் போலீசார் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் பிரசாந்த் பங்கர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். பெண் டாக்டரும், சாப்ட்வேர் என்ஜினீயரும் கடந்த 5 மாதங்களாக உறவில் இருந்ததும், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுக்கு இடையே மனகசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையேயான பிரச்சினை தொடர்பாக டாக்டருக்கு நன்கு தெரிந்த சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானேயை சாப்ட்வேர் என்ஜீயர் அணுகியதாகவும் தெரிகிறது.

இது தொடர்பாக கைதான சாப்ட்வேர் என்ஜினீயரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பதானே நேற்று மாலை பல்தான் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர் என போலீஸ் சூப்பிரெண்டு துஷார் தோஷி கூறினார்.

இந்நிலையில், பெண் டாக்டர் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த 4 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. அதில், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே என்னை கடந்த 5 மாதத்தில் 4 முறை பலாத்காரம் செய்தார். மேலும் அவர் உடல், மனரீதியாக சித்ரவதை செய்து வந்தார். வீட்டின் உரிமையாளர் மகன் பிரசாந்த் பங்கரும் சித்ரவதை செய்து வந்தார்.

இதேபோல மூத்த போலீஸ் அதிகாரிகள் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கு போலி உடல் தகுதி சான்றிதழ் வழங்குமாறு அழுத்தம் கொடுத்தனர். போலீசார் கைதானவர்களை நேரில் அழைத்து வராமலேயே சான்றிதழ் வழங்க கூறுவர். சான்றிதழ் வழங்க மறுத்தபோது போலீஸ் அதிகாரிகள் என்னை மிரட்டி துன்புறுத்தினர். உனது வேலையை காலி செய்துவிடுவேன், பாதுகாப்பாக இருக்க முடியாது என மிரட்டுவார்கள். ஒரு தடவை எம்.பி.யும் கைதான அவரது உதவியாளர்கள் 2 பேருக்கு போலி சான்றிதழ் கொடுக்குமாறு என்னை மிரட்டினார் என கடிதத்தில் அவர் கூறியிருந்தார்.

அந்த எம்.பி. யாரென தெரியாத நிலையில், கடந்த காலத்தில் பெண் டாக்டருக்கு பா.ஜ.க.வின் முன்னாள் எம்.பி. ரஞ்சித் சிங் நாயக் நிம்பல்கர், அழுத்தம் கொடுத்து வந்துள்ளார் என சிவசேனா (உத்தவ் பால் தாக்கரே) மூத்த தலைவரான அம்பாதாஸ் தன்வே குற்றச்சாட்டாக கூறினார். ஆனால், இதில் உண்மையில்லை என நிம்பல்கர் மறுத்துள்ளார்.

எனினும், அந்த எம்.பி. யாரென்று கண்டறியப்பட்டு, வழக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்று யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேஷ் தாஸ் வலியுறுத்தி உள்ளார். இந்த சூழலில் டாக்டரின் உடல் கடந்த வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. அவர் ரூ.3 லட்சம் கடன் வாங்கி எம்.டி. படிப்பை தொடர இருந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Comments