ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பஸ் நேற்று காலை ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பைக் மீது மோதி தீப்பிடித்தது.பஸ்சில் இருந்த 19 பயணிகள் மற்றும் பைக்கில் வந்த வாலிபர் உட்பட 20 பேர் பலியானார்கள்.
இந்நிலையில் ஆம்னி பஸ்ஸில் பார்சலில் வைக்கப்பட்டிருந்த ரூ.46 லட்சம் மதிப்புடைய 234 ஸ்மார்ட்போன்கள் வெடித்ததே தீவிபத்து தீவிரமடைய காரணம் என்று தெரியவந்துள்ளது.
பேருந்தின் சரக்கு வைக்கும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட்போன்களில் உள்ள லித்தியம் அயன் பேட்டரிகள் வெப்பம் காரணமாக வெடித்ததால் தீ மளமளவென பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயணிகள் பேருந்தில் செல்போன்கள் பார்சலை எடுத்துச் சென்றது கடுமையான பாதுகாப்பு விதிமீறலாக பார்க்கப்படுகிறது. மேலும் அந்த பேருந்து விதிமுறைகளை மீறி ஸ்லீப்பர் பேருந்தாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
பைக்கில் வந்து பேருந்துடன் மோதியவர்கள் விபத்துக்கு சிறிது நேரம் முன் பெட்ரோல் பங்கில் மதுபோதையில் காணப்பட்ட வீடியோவும் வெளியாகி உள்ளது. எனவே விசாரணை முழுமையாக நிறைவடைந்த பின்னரே பஸ் விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும்.