Offline
Menu
மருந்து கடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மோதல்… சட்டக்கல்லூரி மாணவரின் வயிற்றைக் கிழித்து, விரல்களை வெட்டிய கொடூரம்
By Administrator
Published on 10/27/2025 14:05
News

லக்னோ,உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அபிஜீத் சிங் சந்தல்(வயது 22). இவர் கான்பூர் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு மெடிக்கல் கடைக்கு மருந்து வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மருந்தின் விலை குறித்து கடைக்காரர் அமர் சிங்கிற்கும், மாணவர் அபிஜீத் சிங்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் அமர் சிங்கின் சகோதரர் விஜய் சிங் மற்றும் 2 நண்பர்களான பிரின்ஸ் ராஜ் மற்றும் நிகில் ஆகியோர் கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து அபிஜீத் சிங்கிடம் வாக்குவாதம் செய்த நிலையில், சிறிது நேரத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அபிஜீத் சிங்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, முகத்தில் ரத்தம் வழியத் தொடங்கியது.

இருப்பினும் நான்கு பேரும் சேர்ந்து விடாமல் அபிஜீத் சிங்கை தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, கடையில் இருந்த கூர்மையான பொருளை எடுத்து அபிஜீத் சிங்கின் வயிற்றில் குத்தி கிழித்துள்ளனர். இந்த கொலை வெறி தாக்குதலில் இருந்து தப்பிக்க அபிஜீத் சிங் உடல் முழுவதும் ரத்தத்துடன் தனது வீட்டை நோக்கி ஓட முயற்சித்துள்ளார். ஆனாலும் அவரை விடாமல் துரத்திச் சென்ற அமர் சிங் மற்றும் அவரது நண்பர்கள், அபிஜீத் சிங்கை பிடித்து அவரது கையில் உள்ள 2 விரல்களை வெட்டியுள்ளனர்.

இதனால் வலி தாங்க முடியாமல் அபிஜீத் சிங் கதறியுள்ளார். இதையடுத்து அங்கு பொதுமக்கள் கூடியதால் 4 பேரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அபிஜீத் சிங்கை பொதுமக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது தலையில் 14 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அபிஜீத் சிங்கை தாக்கிவிட்டு தப்பியோடிய 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comments