பெட்டாலிங் ஜெயா:
சிலாங்கூரின் டாமன்சாரா மற்றும் சுபாங் ஜெயா பகுதிகளில் நடைபெற்ற ஒருங்கிணைந்த போலீஸ் நடவடிக்கையில், பெரிய அளவிலான ஆன்லைன் சூதாட்ட கும்பலை போலீசார் முறியடித்து, மொத்தம் 147 பேரை கைது செய்தனர்.
பொருட்கள் சேமிப்பு அலுவலகங்கள் மற்றும் கிடங்கு வளாகங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. அவை ஆன்லைன் சூதாட்ட தளங்களை உக்கிவிக்கும் மையங்களாகவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு ஸ்லாட் இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் வழங்கும் நிலையங்களாகவும் இருந்தன என்று, மத்திய குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 116 ஆண்கள் மற்றும் 31 பெண்கள் அடங்குவர். இவர்களில் ஏழு பேர் வெளிநாட்டினர், அதில் ஒருவர் பெண். கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் எனக் கூறப்பட்டது.
போலீசார் 139 மடிக்கணினிகள், 182 மொபைல் போன்கள், 126 மானிட்டர்கள், 84 அணுகல் அட்டைகள், ஒன்பது டெஸ்க்டாப் கணினிகள், ஆறு ரூட்டர்கள் மற்றும் ஐந்து ஸ்லாட் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.
“சோதனை செய்யப்பட்ட எந்த இடங்களும் நிதி அமைச்சகம் உட்பட எந்த அதிகாரத்தினரிடமிருந்தும் உரிமம் பெறவில்லை என்பது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது,” என்று எம். குமார் தெரிவித்தார்.