தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். 'சேயோன்' (Seyon) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் 'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டர் பிப்ரவரி 16 அன்று வெளியிடப்பட்டது. 2024-ஆம் ஆண்டு வெளியான மெகா ஹிட் படமான 'அமரன்' திரைப்படத்திற்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் வெளியாகவுள்ள 'தாய் கிழவி' படத்தின் இயக்குனர் சிவகுமார் முருகேசன் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தின் முதல் பார்வைப் போஸ்டரில், சிவகார்த்திகேயன் கையில் அரிவாளுடன் கிராமத்து பாணியில் மிரட்டலாகக் காட்சியளிக்கிறார். அவரைச் சுற்றி மயில்கள் இருப்பது போன்ற வடிமைப்பு, தமிழ் கடவுளான முருகப்பெருமானைக் குறிக்கும் 'சேயோன்' என்ற தலைப்புடன் பொருந்திப் போகிறது. முருகனின் வாகனமான மயில் போஸ்டரில் முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 'அமரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் மற்றும் கலாச்சாரப் பின்னணி கொண்ட திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்களை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர்.
கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இரண்டாவது படம் இது என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு வர்த்தக ரீதியாகவும் அதிகரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், 'சேயோன்' திரைப்படம் 2026-ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2027-ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராமத்து பின்னணியில் சிவகார்த்திகேயனின் நடிப்பு இந்தப் படத்தில் முக்கிய ஈர்ப்பாக அமையும் எனத் தெரிகிறது.