Offline
Menu
மின்சார மீட்டரில் முறைகேடு: TNB-க்கு RM4.7 லட்சம் இழப்பீடு வழங்க நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
By Administrator
Published on 03/24/2026 14:00
News

மின்சார மீட்டரில் முறைகேடு செய்ததற்காக தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனத்திற்கு RM476,124.65 இழப்பீடு வழங்குமாறு மரப்பயன்பாட்டு நிறுவனம் ஒன்றிற்கு கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Top Status KD Sdn. Bhd. என்ற நிறுவனத்திற்கு எதிராக TNB தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமட் சாப்ரி இஸ்மாயில் இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கினார்.

கொரோனா பேரிடர் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO) காரணமாக தொழிற்சாலை மூடப்பட்டதால்தான் மின்சாரப் பயன்பாடு குறைந்ததாக அந்த நிறுவனம் வாதிட்டது. ஆனால், நீதிபதி இந்த வாதத்தை நிராகரித்தார்.

மின்சாரப் பயன்பாடு குறையத் தொடங்கியது 2019 டிசம்பர் 31 முதல். ஆனால் MCO அமல்படுத்தப்பட்டது 2020 மார்ச் 18-இல் தான் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

2019 டிசம்பர் முதல் 2020 அக்டோபர் வரையிலான காலத்தில் மின்சாரப் பயன்பாடு பெருமளவு குறைந்ததற்கான உண்மையான காரணத்தை விளக்க அந்த நிறுவனம் தவறிவிட்டது. மேலும் நிறுவனத்தின் சாட்சிகள் வெறும் மறுப்புகளை மட்டுமே கூறினரே தவிர, TNB-யின் கணக்கீட்டில் தவறு இருப்பதை நிரூபிக்கவில்லை.

2020 அக்டோபர் 30 அன்று சிலாங்கூர், போர்ட் கிள்ளானில் உள்ள அந்த நிறுவனத்தின் வளாகத்தில் TNB அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, மீட்டரின் பாதுகாப்பு முத்திரைகள் (Terminal seals) காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக் காட்ட ஏதுவாக, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கக்கூடிய கூடுதல் மின்சுற்று (Additional circuit) சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்தது உறுதியானது.

மின்சார வழங்கல் சட்டம் 1990-இன் கீழ், மீட்டர் முறைகேடு நிரூபிக்கப்பட்டால், அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பைச் சிவில் வழக்கு மூலம் வசூலிக்க TNB-க்கு முழு உரிமை உண்டு என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். இதன் அடிப்படையில், வருவாய் இழப்பு மற்றும் செயல்பாட்டுச் செலவு என மொத்தம் RM476,124.65 தொகையைச் செலுத்த உத்தரவிடப்பட்டது.

Comments