Offline
Menu
DUKE நெடுஞ்சாலையில் கோர விபத்து: நடுரோட்டில் நின்ற லோரியால் நேர்ந்த விபரீதம்! இருவர் பலி; மூவர் படுகாயம்
By Administrator
Published on 04/05/2026 18:40
News

டூத்தா-உலு கிள்ளான் (DUKE) நெடுஞ்சாலையில் நேற்று மதியம் நிகழ்ந்த வாகன விபத்தில், மலேசியர் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் பலத்த காயமடைந்தனர்.

ஆயர் பானாஸ் (Ayer Panas) சுங்கச்சாவடிக்கும் அம்பாங்கிற்கும் இடையே KM10.4 பகுதியில் லோரி ஒன்று பழுதடைந்து நடுவரிசையில் (Middle Lane) நின்றுள்ளது. பின்னால் வந்த பிக்கப் (Pickup) வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நின்றுகொண்டிருந்த லாரியின் மீது மோதியது. விபத்தைக் கண்டு உதவுவதற்காக மற்றொரு லோரி அங்கு நிறுத்தப்பட்டது.

அப்போது பின்னால் அதிவேகமாக வந்த மூன்றாவது லாரி, அங்கு நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மற்றும் நபர்கள் மீது பயங்கரமாக மோதியது என்று, கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணைப் பிரிவுத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் முகமட் ஜம்சூரி முகமட் ஈசா தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் 52 மற்றும் 53 வயதுடைய இரு ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் ஒரு உள்ளூர் லோரி ஓட்டுநர் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த பிக்கப் வாகன ஓட்டுநர் ஆவர். விபத்தின் போது அவர்கள் வாகனத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்ததால், லோரியின் அடியில் சிக்கித் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்து பலியாகினர்.

மேலும் 43, 35 வயதுடைய இரு ஆண்கள் மற்றும் 38 வயதுடைய வெளிநாட்டவர் என மூவர் காயமடைந்து கோலாலம்பூர் மருத்துவமனையில் (HKL) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்றாவது லோரி ஓட்டுநர் வாகனத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதே விபத்திற்குக் காரணம் எனப் போலீசார் கருதுகின்றனர்.

அந்த ஓட்டுநருக்கு நடத்தப்பட்ட மதுபானப் பரிசோதனையில் (Breathalyser) ‘நெகட்டிவ்’ என வந்துள்ளது. போதைப்பொருள் பரிசோதனைக்கான (Urine Test) முடிவுகள் இன்னும் வரவில்லை.

இந்த வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Comments