Offline
Menu
ரவாங் லோரி விபத்து: தனியார் பல்கலைக்கழக மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு; நண்பர் காயம்!
By Administrator
Published on 06/12/2026 10:00
News

கோலாலம்பூர்:

ரவாங், தாமான் சாரி (Taman Sari) போக்குவரத்துச் சந்திப்பில் நேற்றைய தினம் கார் ஒன்றும் லோரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த நண்பர் காயமடைந்தார்.

இச்சம்பவம் கன்றி ஹோம்ஸ் (Country Homes) நோக்கிச் செல்லும் பாதையில் மதியம் 2.25 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமை உதவி ஆணையர் இப்ராஹிம் ஹுசின் தெரிவித்துள்ளார்.

“முதற்கட்ட விசாரணையின்படி, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் எதிர்த் திசைக்குச் சென்று, அங்கு வந்துகொண்டிருந்த லாரி மீது பலமாக மோதியுள்ளது தெரியவந்துள்ளது.

காரை ஓட்டிச் சென்ற 18 வயது மாணவர், கடுமையான காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பதை சுங்கை பூலோ மருத்துவமனையின் உதவி மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்,” என்று அவர் தெரிவித்தார்.

பலியான மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகச் சுங்கை பூலோ மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் காரில் பயணித்த மற்றொரு 18 வயது மாணவர் (உயிரிழந்தவரின் நண்பர்) காயமடைந்து அருகில் உள்ள கிளினிக்கில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்குள்ளான லோரியின் ஓட்டுநருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்ட இருவரும் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 41(1) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொது மக்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் ரத்தனா குமார் வரதராஜுவை 017-7745565 என்ற எண்ணிலோ அல்லது கோம்பாக் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறையை 03-6126 2222 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Comments