Offline
Menu
முதல்-அமைச்சர் விஜய்யுடன் நடிகை சமந்தா சந்திப்பு
By Administrator
Published on 06/19/2026 08:00
News

சென்னை, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதி, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதல்-அமைச்சர் விஜய்யை பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள விஜய்யுடன் நீண்டகால நட்பு கொண்ட பல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அண்மையில் அவரை சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளனர். அந்த வகையில், இயக்குநர்கள் ஆர்.ஜே. பாலாஜி, ஏ.ஆர். முருகதாஸ், நடிகர்கள் பார்த்திபன், சிபி சத்யராஜ், நடிகை சிம்ரன் உள்ளிட்டோர் சமீபத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்தனர்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யை நடிகை சமந்தா இன்று நேரில் சந்தித்துள்ளார். விஜய்யுடன் சமந்தா கத்தி(2014), தெறி(2016) மற்றும் மெர்சல்(2017) ஆகிய 3 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யுடனான சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ளார். அந்த பதவில் அவர் கூறியிருப்பதாவது;-

“இன்று சென்னைக்கு வந்திறங்கியபோது, நமது முதல்-அமைச்சரை சந்திக்கப் போகிறோம் என்ற உணர்வு எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது.

விஜய் சார் திரையில் வெறும் கதாநாயகனாக இருப்பதற்காகப் பிறந்தவர் அல்ல என்று நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அவருடைய ஆற்றல், அவருடைய இயல்பு மற்றும் மக்கள் அவரிடம் காட்டும் வரவேற்பு ஆகியவை, அவர் ஏதோ ஒரு பெரிய விஷயத்திற்காகப் பிறந்தவர் என்பதை எப்போதும் உணர்த்தின.

முற்றிலும் புதிய ஒரு களத்தில் அடியெடுத்து வைப்பதற்கு அவருக்கு இருக்கும் துணிச்சல்தான் என்னை மிகவும் ஊக்குவிக்கிறது. ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு துறையை விட்டுவிட்டு, மிக அதிக சவால்கள் நிறைந்த ஒரு துறைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். உங்களால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நீங்கள் நம்பினால் மட்டுமே இத்தகைய முடிவை எடுக்க முடியும்.

நம் வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில், நாம் அனைவரும் இன்னும் அதிக சவால்களை சந்திக்க அழைக்கப்படுகிறோம். உண்மையில், மிகச் சிலரே அந்த அழைப்பிற்கு பதிலளிக்கிறார்கள்.

விஜய் சார், ஏற்கனவே அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களைக் கூட ஆச்சரியப்படுத்துவார் என்று எனக்குத் தோன்றுகிறது. அவர் வகிக்கும் பதவியால் அல்ல, மாறாக அவர் அதை அணுகும் நோக்கத்தால்.

மேலும், இதைப் பார்க்கும் ஒவ்வொரு இளைஞருக்கும், உங்கள் கனவை விட வாழ்க்கை மிகப் பெரியதாக இருக்க முடியும் என்பதற்கான நினைவூட்டலாக இது இருக்கட்டும்.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Comments