Offline
Menu
ஏஐ, டிஜிட்டல் மயமாக்கல் சவால்: அடுத்த 5 ஆண்டுகளில் 7 லட்சம் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் அபாயம்!
By Administrator
Published on 06/25/2026 10:00
News

மலேசியத் தொழிலாளர்கள் தங்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ளாவிட்டால், செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் பசுமைப் பொருளாதாரம் ஆகியவற்றின் எழுச்சியால் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் நாட்டில் சுமார் 6,97,000 வேலைவாய்ப்புகள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் எச்சரித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில், பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அஸ்மான் நஸ்ருடின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ‘டேலண்ட்கார்ப்’ (TalentCorp) நிறுவனம் நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதே காலகட்டத்தில் தொழில்நுட்ப மாற்றங்களால் 120 புதிய வேலைப் பொறுப்புகள் மிக முக்கியமானதாக உருவெடுக்கும் என்றும் கூறினார்.

நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் 12 வரை மலேசியாவில் 42,807 பேர் வேலைகளை இழந்துள்ளனர். இதில் 40.85 விழுக்காடு வேலை இழப்புகள், நிறுவனங்களின் மூடல் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் நிகழ்ந்தவை ஆகும். மாநில வாரியாக அதிகபட்சமாக கோலாலம்பூர்: 12,844 பேர்,சிலாங்கூர்: 12,360 பேர், ஜோகூர்: 3,468 பேர் வேலைகளை இழந்துள்ளனர்.

இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும், ‘மைஃபியூச்சர்ஜாப்ஸ்’ (MYFutureJobs) இணையதளத்தில் 6,05,168 வேலைக்காலியிடங்கள் பதிவாகியுள்ளன என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தை எதிர்கொள்ள ‘மைமாஹிர்’ (MyMahir) தளம் மற்றும் ஏஐ (AI) பயிற்சித் திட்டங்களை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது என்றார். இதற்காக, பிடிபிகே (PTPK) வாரியம் மூலம் உயர்தர திவேட் (TVET) பயிற்சிக்காக 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ரமணன் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

Comments

More news