காஜாங்:
இங்குள்ள பண்டார் ஸ்ரீ புத்ரா (Bandar Sri Putra) மசூதிக்கு அருகிலுள்ள பெரிய சாக்கடையில் (Drain) தவறி விழுந்த 16 வயது மதிக்கத்தக்கப் பதின்ம வயது சிறுவன் ஒருவன், விழுந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தண்ணீர்த் தேக்கப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
இச்சோகச் சம்பவம் குறித்துச் சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) உதவி செயல்பாட்டு இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் கூறுகையில், இன்று மாலை 4.23 மணியளவில் இச்சம்பவம் குறித்துத் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.
அழைப்பைப் பெற்ற உடனே, வாங்கி (Bangi) தீயணைப்பு நிலையத்தின் எல்லைக்குட்பட்ட செமினி (Semenyih) தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மாலை 4.48 மணியளவில் அங்குச் சென்றடைந்தனர்.
உடனடியாக அந்தப் பகுதி முழுவதும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து அஷ்ருல் ரிசால் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “தீயணைப்பு வீரர்களின் தீவிரத் தேடுதலுக்குப் பிறகு, சிறுவன் சாக்கடையில் விழுந்த இடத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தண்ணீர்த் தேக்கப் பகுதியில் (Water catchment area) அவனது உடல் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது. தற்போது மேலதிக நடவடிக்கைகளுக்காகத் தீயணைப்புத் துறையினர் காவல்துறையின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்துக் காஜாங் மாவட்டக் காவல்துறை மரண விசாரணைப் பிரிவின் கீழ் வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.