Offline
Menu
வெனிசுலாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் – 164 பேர் உயிரிழப்பு
By Administrator
Published on 06/27/2026 08:00
News

கராகஸ், வெனிசுலா நாட்டில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால், இடிபாடுகளில் சிக்கி இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் இன்று காலை ரிக்டர் 7.2 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது, தலைநகர் கராகஸில் இருந்து சுமார் 168 கி.மீ. தொலைவில் உள்ள மொரான் நகரின் மேற்கு பகுதியில் அமைந்திருந்தது.

இதைத் தொடர்ந்து ஒரு சில நிமிடங்களில் 2-வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. மொரான் நகரின் தென்மேற்கில் சுமார் 16 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது. இந்த 2 நிலநடுக்கங்களும் வெனிசுலாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக பயங்கரமான நிலநடுக்கங்கள் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அவசர நிலை

2 பயங்கர நிலநடுக்கங்களை தொடர்ந்து, சுமார் 20 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து மோசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நிலவரத்தின் தீவிரம் கருதி வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அறிவித்துள்ளார்.

மீட்புப் பணிகள்

இதுவரை வெளியான தகவல்களின்படி, வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 164 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 971 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் மீட்புப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

Comments