பாரஸ்ட் சிட்டியில் (Forest City) அமைந்துள்ள ‘நெட்வொர்க் ஸ்கூல்’ (Network School) எனும் சமூக அமைப்பைச் சுற்றி எழுந்துள்ள கடுமையான சர்ச்சையைத் தொடர்ந்து, ஜோகூர் மாநில அரசு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவின் இறையாண்மைக்கும், தேசிய நலன்களுக்கும் எதிரான எந்தவொரு சித்தாந்தத்தையும் பரப்பும் தளமாக ஜோகூர் மாநிலத்தைப் பயன்படுத்த எவரையும் அனுமதிக்க முடியாது என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஆன் ஹபீஸ் காசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மலேசியாவிற்குள் நுழைய அதிகாரப்பூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டின் பிரஜைகள் சிலர், தங்களது இரண்டாவது கடப்பிதழைப் (Second passport) பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்து, இந்த ‘நெட்வொர்க் ஸ்கூல்’ அமைப்பில் இடம்பெற்றிருப்பதாகத் தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக மந்திரி பெசார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு விவகார அமைச்சு (KDN), குடிநுழைவுத் துறை, அரச மலேசிய போலீஸ் படை (PDRM) மற்றும் சுங்கத் துறை ஆகிய கூட்டாட்சி முகமைகள் உடனடியாக இணைந்து இந்த அமைப்புடன் தொடர்புடையவர்களின் பின்னணி, அடையாளம் மற்றும் குடியுரிமை குறித்து முழுமையான விசாரணையைத் தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர்கள் பயன்படுத்திய விசாக்கள், கடப்பிதழ்கள் மற்றும் மாற்று ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து கோப்புகளும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கட்டளையிட்டுள்ளார்.