சுபாங் ஜெயாவில் கடந்த வாரம் தான் பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ், 23 வயதுடைய சூப்பர்மார்க்கெட் விற்பனைப் பெண் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) தனது 23-வது பிறந்தநாளைக் கொண்டாடிய சித்தி நூர் வாஹிதா ஜைனுடின் என்ற அந்தப் பெண், ஜூலை 7-ஆம் தேதி காலை 5 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் சுபாங் ஜெயா, USJ 14-இல் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இக்குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீல நிற ஆடை அணிந்து, கைவிலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், மஜிஸ்திரேட் அமீரா மஸ்துரா காமிஸ் முன்னிலையில் வாசித்துக் காட்டப்பட்ட குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டதாகத் தலையசைத்துக் கூறினார். எனினும், கொலை வழக்குகள் உயர் நீதிமன்ற வரம்பிற்குள் வருவதால் அவரிடமிருந்து எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த வழக்கு கொலைக்குற்றத்திற்கான தண்டனைச் சட்டம் பிரிவு 302 இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால, மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
மரண தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில், குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் (Rotan) விதிக்கப்பட சட்டம் வழிவகை செய்கிறது.
நீதிமன்ற நடவடிக்கைகளின் போது எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் மௌனமாக நின்ற அந்தப் பெண்ணுக்கு வக்கீல் எவரும் முன்னிலையாகவில்லை. இது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என்பதால், அரசு தரப்பு துணை வழக்கறிஞர் நூர் அகிலா ரோஸ்மி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கக் கூடுதல் அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 23-ஆம் தேதிக்கு மெஜிஸ்திரேட் ஒத்திவைத்தார்.
நீதிமன்றப் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த சித்தி நூர் வாஹிதாவின் மூத்த சகோதரி, வழக்கின் தீவிரத்தைக் கேட்டு நீதிமன்றத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார்.
ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், கிராமத்தில் இருக்கும் தங்களது வயதான பெற்றோரின் மனநலனைப் பாதுகாக்கும் பொருட்டு, தனது தங்கையின் முகத்தைப் புகைப்படங்களில் மங்கலாக்குமாறு (Blur) கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பின்னர், தன் அக்காவிடம் தனக்கு “வீட்டிற்குப் போக வேண்டும்” என்று சித்தி நூர் வாஹிதா கூறியது அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.