Offline
Menu
நான்கு முக்கிய சீர்திருத்தங்களை பிரதமர் நிறைவேற்ற வேண்டும் – டிஜிட்டல் அமைச்சர் கோரிக்கை!
By Administrator
Published on 08/18/2026 15:00
News

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம், ஆண்டு இறுதிக்குள் குறைந்தது நான்கு முக்கியமான சீர்திருத்த நடவடிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என டிஜிட்டல் அமைச்சரும் DAP கட்சியின் தலைவருமான கோபிந்த் சிங் டியோ (Gobind Singh Deo) வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற DAP தேசிய மாநாட்டின் தீர்மானத்திற்கு இணங்க, பிகேஆர் உடனும் (PKR), கூட்டணிக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து இந்த இலக்குகளை எட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே கோபிந்த் சிங் வலியுறுத்தும் முக்கிய சீர்திருத்தங்கள் என்னவென்றால், முதலாவதாக தலைமை நீதிபதி, அரசுத் தரப்பு வழக்குரைஞர்  ஆகியோரின் அதிகாரங்களைப் பிரிப்பதற்கான சட்ட வரைவு தற்போது நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கும் ஒப்புதலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, பிரதமர் பதவிக்கான கால வரம்பு: பிரதமர் பதவியில் ஒரு நபர் வகிக்கக்கூடிய அதிகபட்ச கால எல்லையை இரண்டு தவணைகளாக நிர்ணயிக்கும் மசோதா கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் போதிய வாக்குகளின்றித் தோல்வியடைந்த நிலையில், அதனை மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும்.

மூன்றாவதாக, SOSMA மற்றும் பேரணிச் சட்டம்: பாதுகாப்புச் சட்டமான SOSMAவும், அமைதியான முறையில் பேரணிகளை நடத்தும் சட்டம் (Akta Perhimpunan Aman) ஆகியவற்றில் அவசியமான திருத்தங்களைச் கொண்டு வருவதாகும்.

கடந்த நான்கு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தப்பட்டு வந்த Tabung Haji RCI (அரச விசாரணை ஆணையம்) அறிக்கை விவகாரத்தில் அரசாங்கம் எவ்வாறு துரிதமாகச் செயல்பட்டதோ, அதே போன்றதொரு சிறப்பு நாடாளுமன்ற அமர்வை அல்லது கூடுதல் நாட்களை ஒதுக்கி இந்தச் சீர்திருத்த மசோதாக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோபிந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பல்கலைக்கழக , கல்லூரி பல்கலைக்கழகச் சட்டம் (AUKU) நீக்கம் குறித்த அறிவிப்புகளைப் பிரதமர் அன்வார் இப்ஹிம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது என்றாலும் இந்த சீர்திருத்தங்களை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்பதே கோபிந்த் சிங்கின் வேண்டுகோளாக அமைந்துள்ளது.

Comments