Offline
Menu
வங்கிக் கணக்குகளையும் ஏடிஎம் கார்டுகளையும் பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்: சபா போலிஸ் கடும் எச்சரிக்கை!
By Administrator
Published on 08/25/2026 18:00
News

சபா, பியூஃபோர்ட் பகுதியில் நடைபெற்ற தங்க வியாபார மோசடியில் ஏமாற்றப்பட்ட பணத்தைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ‘மியூல் கணக்கின்’ (Mule Account) உரிமையாளரான பெண் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசாரால் நடத்தப்பட்ட ‘ஒப் கேசான் காஸ்’ (Ops Kesan Khas) சிறப்பு நடவடிக்கையின் போது, மோசடிப் பணம் கைமாறிய வங்கிக் கணக்கின் உரிமையாளரான அப்பெண் பிடிபட்டார் என்று, பியூஃபோர்ட் மாவட்ட போலிஸ் தலைவர் சுப்ரிண்டண்டன் சாம்பின் பியூ கூறினார்.

ஆரம்ப விசாரணையில், அப்பெண் ‘அஹ் சாய்’ எனப்படும் நபர் ஒருவரிடம் தனது ATM கார்டு மற்றும் கடவுச்சொல்லை (Password) வழங்கியது தெரியவந்தது. வங்கி மூலம் கடன் ஒப்புதல் பெறுவதற்காக ATM கார்டு தேவைப்படுவதாக அந்நபர் கூறியதை நம்பி அவர் கார்டைக் கொடுத்துள்ளார்.

தனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட பின்னரே, தனது கணக்கு சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதை உணர்ந்ததாக அப்பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களின் வங்கி ATM கார்டுகள், கடவுச்சொற்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை எக்காரணத்தைக் கொண்டும் அறிமுகமில்லாத நபர்களிடம் வழங்கவோ அல்லது அவர்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கவோ கூடாது என சுப்ரிண்டண்டன் சாம்பின் பியூ கடுமையாக எச்சரித்துள்ளார்.

Comments