Offline
Menu
மதரஸா விடுதியில் சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: 24 வயது போதனை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
By Administrator
Published on 08/25/2026 18:00
News

பத்து பஹாட்டில் உள்ள மதரஸா விடுதி ஒன்றில் 10 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக 24 வயது போதனை ஆசிரியர் மீது மூவார் அமர்வு நீதிமன்றத்தில் 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட முகமட் ஹில்மி முகமட் நூர் என்பவர் மீதான வழக்கு அமர்வு நீதிமன்ற நீதிபதி எமிலியா கஸ்வாத்தி முகமட் காலித் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

கடந்த ஜூலை மாதம் பிற்பகல் 4 மணியளவில் மத்ரஸா விடுதியில் வைத்து இரு சிறுவர்களுக்கும் பாலியல் தொல்லை அளித்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர் மீது 2017-ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டத்தின் பிரிவு 14(a) மற்றும் 14(b) உடன் இணைந்த பிரிவு 16-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரிவு 14-இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம். பிரிவு 16-இன் கீழ் கூடுதல் 5 ஆண்டுகள் சிறை மற்றும் குறைந்தபட்சம் 2 பிரம்படிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து தான் குற்றமற்றவர் என வாதாடினார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் அமீரா சஃபியான் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் RM20,000 பிணைத் தொகை கோரிய நிலையில், நீதிமன்றம் அனைத்து 4 குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து RM15,000 பிணைத் தொகையை அனுமதித்தது.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் மாதந்தோறும் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அரசுத் தரப்பு சாட்சிகளை அணுகவோ அல்லது தொடர்பு கொள்ளவோ கூடாது என்றும் கூடுதல் உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கின் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும், வழக்கறிஞரை நியமிப்பதற்கும் ஏதுவாக வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

Comments