Offline
Menu

LATEST NEWS

குளுவாங்கில் உரிமமின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையாளர் மீது குற்றச்சாட்டு!
By Administrator
Published on 08/28/2026 11:00
News

ஜோகூர், குளுவாங்கில் முறையான உரிமமின்றி ‘Smith & Wesson’ ரக துப்பாக்கியை வைத்திருந்ததாகப் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையாளர் (Used Car Dealer) ஒருவர் மீது இன்று குளுவாங் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி ஹானி சாத்துல் அக்மார் சுல்கெஃப்லி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, 33 வயதுடைய ஹோ ஹான் வே (How Han Wei) தனக்கு மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில், தாமான் குளுவாங் இண்டாவில் உள்ள வீடு ஒன்றில் முறையான சட்டப்பூர்வ அனுமதியின்றி ‘Smith & Wesson’ ரக துப்பாக்கியை வைத்திருந்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர் மீது 1971-ஆம் ஆண்டு துப்பாக்கிச் சட்டம் (அதிகரிக்கப்பட்ட தண்டனைகள்) பிரிவு 8-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் குறைந்தபட்சம் 6 பிரம்படிகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ஹோ ஹான் வே, இந்த மாதத் தொடக்கத்தில் பாரிட் ராஜா, சுங்கை தஞ்சோங் செம்பரோங் ஆற்றில் 39 வயதுடைய வணிகர் ஒருவர் கைகால்கள் கட்டப்பட்டு, வலையில் சுற்றிக் கொல்லப்பட்டுக் கிடந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களில் ஒருவராவார்.

ஆகஸ்ட் 17-ஆம் தேதி பத்து பஹாட் குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் உட்பட 4 பேர் மீது ஏற்கனவே கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாமீனில் வர முடியாத குற்றம் என்பதால் குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பிணை மறுக்கப்பட்டது. வழக்கு ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக இந்த வழக்கை வரும் செப்டம்பர் 28-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Comments