கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் திருமணம் முடிந்து வரவேற்பு விழா நடைபெற்ற நிலையில், 24 வயதுடைய இராணுவ வீரர் ஒருவர் நேற்று தம்பினில் நிகழ்ந்த 3 வாகன விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் தம்பின்-கெமிஸ் சாலையின் 0.7-ஆவது கிலோமீட்டரில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகப் போலிசார் தெரிவித்தனர்.
24 வயதுடைய இராணுவ வீரர் தனது மனைவியுடன் ‘யமஹா Xmax’ (Yamaha Xmax) ரக ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார்.
20 வயதுடைய உள்ளூர் இளைஞர் ஓட்டி வந்த ‘Perodua Bezza’ கார் தம்பினில் இருந்து கெமிஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எதிர் பாதையில் நுழைந்து கணவன்-மனைவி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
மற்றொரு காரிலும் மோதல்: மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த ‘பெரோடுவா பெஸா’ கார் சுழன்று சென்று, 39 வயது பெண் ஓட்டி வந்த ‘பெரோடுவா விவா’ (Perodua Viva) காரின் மீதும் மோதியது.
விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் உடனடியாகக் கோலா பிலாவில் உள்ள துவாங்கு அம்பான் நஜிஹா மருத்துவமனைக்கு (HTAN) சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ராணுவ வீரர் உயிரிழந்தார். அவரது மனைவி தலையில் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.