சந்தேக நபர் ஒருவரின் பொருட்களைத் திருடியதாக எழுந்த சந்தேகத்தில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சுங்கை பட்டாணிக்கு அருகில் கம்போங் சுங்கை டிவிஷனிலுள்ள செம்பனைத் தோட்டம் ஒன்றில் அந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது என்று, இன்று கூலிம் மாவட்டக் காவல் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தித் தொடர்பாளர் சந்திப்பில் கெடா மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ அத்லி அபூ ஷா கூறினார்.
அலோர் ஸ்டார், சுல்தானா பாஹியா மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூறாய்வில், கனமான மரக்கட்டையால் தலையின் பின்பகுதியில் பலமாகத் தாக்கப்பட்டதே மரணத்திற்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கோலா மூடா மாவட்டக் காவல் தலைமையகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விரைவு நடவடிக்கையின் மூலம், 26 முதல் 37 வயதுடைய 4 உள்ளூர் ஆண்கள் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் நீளமான மரக்கட்டை ஒன்றையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களும் ஏற்கனவே குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பல்வேறு பழைய குற்றப் பதிவுகளைக் கொண்டவர்கள் ஆவர்.
இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டக் கோட்பாட்டின் பிரிவு 302 (கொலை) -இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் அனைத்துச் சந்தேக நபர்களும் வரும் ஆகஸ்ட் 31 வரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.