இன்று காலை ஆயர் மெர்பாவ் முச்சந்திப்பு சிக்னலில் ஆம்புலன்ஸ் வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புக்கிட் பேருவாங் சமூகக் கல்லூரியைச் சேர்ந்த 18 வயது மாணவர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த முகமட் அமீருல் அஷ்ராஃப் முகமட் அசிசான், காலை 10:30 மணியளவில் ஜாசின் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று, ஜாசின் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரண்டன் லீ ராபர்ட் கூறினார்.
குறித்த மாணவர் ஜாசினிலிருந்து பெம்பான் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். ஆம்புலன்ஸ் வாகனம் ஆயர் மெர்பாவிலிருந்து ஜாசின் மருத்துவமனை நோக்கிச் சென்றது. சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தபோது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முச்சந்திப்பில் இருந்து வெளியேறியதால், வலதுபுறத்தில் இருந்து வந்த மாணவரின் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸின் ஓட்டுநர் பக்கத்தில் பலமாக மோதியுள்ளது.
இந்த மோதலால் தலை, கைகள் மற்றும் கால்களில் பலத்த காயமடைந்த மாணவர் உடனடியாக ஜாசின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் காலை 10:30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த மாணவர், ஜாசின் மாவட்டப் போக்குவரத்துப் புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவின் (BSPTD) பொது அதிகாரி ஒருவரின் மகன் ஆவார்.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முகமட் நூரிக்மால் பஹாரூடின் (41) என்பவருக்கு கை முறிவு, மருத்துவ உதவியாளர் தைம் அப்துல்லா (24) மற்றும் நோயாளி கே. செராஸ் @ ஜெயராஜ் (81) ஆகியோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் (அபாரகரமாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல்) கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.