Offline
Menu
பெர்லிஸில் கனமழை, பலத்த காற்று: திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் 16 இடங்களில் மரங்கள் சாய்ந்தன!
By Administrator
Published on 08/30/2026 12:00
News

பெர்லிஸ் மாநிலத்தில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஆராவ் மற்றும் படாங் பெசார் சுற்றியுள்ள பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், 16 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

பெர்லிஸ் மலேசியப் பொதுத் தற்காப்புப் படை (APM) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கம்போங் பும்பங் லிமா பத்தாஸ் லிகு, கம்போங் ராணி எஸ்டேட், பொது வீட்டுத்திட்டப் பகுதி மற்றும் கம்போங் தித்தி பெசி ஆகியவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முக்கிய பகுதிகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன என்றார்.

பிற்பகல் 2.38 மணி நிலவரப்படி, மரங்கள் சாய்ந்ததாக வரப்பெற்ற 16 புகார்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு மரங்கள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன.

நகம்போங் ராணி எஸ்டேட் பகுதியில் வெள்ளநீர் முழுமையாக வடிந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. கம்போங் தித்தி பெசி பகுதியிலும் நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.

கம்போங் கோலம் அருகிலுள்ள முக்கிய சாலையைக் கடந்து வெள்ளநீர் பாய்ந்தது. மேலும், செகோலா கெபாங்சான் தித்தி திங்கி (SK Titi Tinggi) பள்ளி வளாகத்தில் கணுக்கால் அளவுக்கு நீர் தேங்கியது.

படாங் பெசாரின் பெசேரி, பாலை பாரு அருகிலுள்ள சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.

குறித்த இடங்கள் பாதிக்கப்பட்ட போதிலும் வீடுகளை விட்டு வெளியேற மறுத்த மக்களுக்கு, அவசர உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள MERS அவசர உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மழை தொடர்ந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க ஆபத்து நிறைந்த பகுதிகளைத் தற்காப்புப் படையினர் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

Comments