Offline
Menu
நஜிப்பின் தாமான் டூத்தா இல்லத்தை பார்வையிட்ட சிறைத்துறை அதிகாரிகள்
By Administrator
Published on 09/20/2026 16:00
News

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது மீதமுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிப்பதற்கான நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பைப் பெற்ற மறுநாளான இன்று காலை, கோலாலம்பூரில் உள்ள தமன் டூத்தாவில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்குச் சிறைத்துறையின் இரண்டு வாகனங்கள் வந்தடைந்தன.

சிறைத்துறை அதிகாரிகள் பலரை ஏற்றி வந்த அந்த வாகனங்கள் காலை சுமார் 9.40 மணியளவில் அவரது இல்ல வளாகத்திற்குள் நுழைந்ததாக ‘பெரித்தா ஹரியான்’ செய்தி வெளியிட்டுள்ளது. நஜிப்பை வீட்டுக் காவலில் வைப்பதற்கு அந்த இல்லம் ஏற்றதா என்பதை ஆய்வு செய்வதற்காகவே அதிகாரிகள் அங்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன் கதவு வழியாக உள்ளே செல்வதற்கு முன், அதிகாரிகள் சிலர் சுமார் 15 நிமிடங்கள் அப்பகுதியைச் சுற்றி ஆய்வு செய்தனர்.

 கூட்டரசு பிரதேசங்களுக்கான மன்னிப்புக் குழுவின்  கூட்டத்தைத் தொடர்ந்து,   மாமன்னர் ஒரு முடிவை எடுத்ததாகப் பிரதமர் துறை நேற்று அறிவித்தது. அதன்படி, 5 கோடி ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தும் பட்சத்தில், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல்  வழக்கில் விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத்தண்டனையின் மீதமுள்ள காலத்தை நஜிப் தனது வீட்டிலேயே கழிக்க அனுமதிக்கப்பட்டார். இந்த நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பின் கீழ், அபராதத் தொகையைச் செலுத்துவதற்கு உட்பட்டு, நஜிப் தனது தண்டனையின் மீதமுள்ள காலத்தை ஆகஸ்ட் 23, 2028 வரை வீட்டுக் காவலில் கழிப்பார்.

பிப்ரவரி 2024-இல் மன்னிப்புக் குழுவால் வழங்கப்பட்ட  12 ஆண்டு சிறைத்தண்டனையை பாதியாகக் குறைத்ததைத் தொடர்ந்து, 73 வயதான நஜிப் காஜாங் சிறையில் ஆறு ஆண்டு தண்டனையை அனுபவித்து வருகிறார். மேலும் அக்குழுவால் விதிக்கப்பட்ட 210 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையும் 50 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டது.

Comments