ஜாலான் ஈப்போ MRT ரயில் நிலையத்தில் ரயில் ஒன்றின் பிரேக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரபிட் கேஎல் (Rapid KL) நிறுவனத்தின் புத்ராஜெயா வழித்தட சேவை, இன்று காலை 9.32 மணி முதல் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட ரயில் சேவையிலிருந்து அகற்றப்பட்டதாகச் சேவை உரிமையாளரான ரபிட் கேஎல் தெரிவித்துள்ளது.
சேவை தடைபட்ட காலத்தில் பயணிகளின் வசதிக்காகச் செயல்படுத்தப்பட்ட மாற்று ரயில் சேவைகள் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேலும், ரயில் சேவையை நிலைப்படுத்துவதற்காக அதன் இயக்க இடைவெளி நேரங்கள் படிப்படியாகச் சரிசெய்யப்பட்டு வருகின்றன.
“சேவை தடையின் போது பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு ரபிட் கேஎல் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதோடு, அவர்களின் பொறுமைக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக’ ரபிட் கேஎல் (Rapid KL) தனது முகநூல் பதிவினுடாக தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜாலான் ஈப்போ நிலையத்தில் ரயில் ஒன்று நகர முடியாமல் நின்றதால் புத்ராஜெயா வழித்தடத்தில் ரயில் சேவைகள் தாமதமாகியதாக தகவல்கள் வெளியாகின.