Offline
Menu
சட்டவிரோதக் குடியேறிகளுக்கு வீடுகளை வாடகைக்கு விடக்கூடாது
By Administrator
Published on 09/26/2026 17:00
News

புத்ராஜெயா, பிரசினோட் 9 பகுதியில் ‘பிளாட் ஹிஜாவ்’ எனப் பிரபலமாக அறியப்படும் புத்ரா ஹர்மோனி அடுக்குமாடி குடியிருப்பில் மலேசியக் குடிநுழைவுத் துறை நடத்திய ‘ஓப்ஸ் பின்டூ’ (Ops Pintu) சோதனை நடவடிக்கையில் 84 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இரண்டு கட்டங்களாக முடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் முதற்கட்டமாக, வணிக வளாகங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் குடியிருப்புப் பகுதிகளில் அதிரடிச் சோதனைத் தொடரப்பட்டது.

 

“பல்வேறு நிலைகளிலான 60 குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தச் சோதனையில் மொத்தம் 321 நபர்கள் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 73 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் உட்பட மொத்தம் 84 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டு மேல் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்று மலேசியக் குடிநுழைவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பொதுமக்களிடமிருந்தும் கிடைத்த புகார்களைத் தொடர்ந்து, குடிநுழைவுத் துறையின் உளவுப்பிரிவு நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் அப்பகுதியில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் சிலர் சட்டவிரோதமாக வியபார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது.

 

முன்னதாக, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி இதே பகுதியில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட சோதனையில் இந்தோனேசியா, வங்காளதேசம், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 325 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

சட்டவிரோதக் குடியேறிகள் குழுவாகத் தங்குவதையும் நாட்டின் குடிநுழைவுச் சட்ட மீறல்களையும் தீவிரமாகக் கருதுவதாகத் தெரிவித்த குடிநுழைவுத் துறை, வீட்டு உரிமையாளர்கள் தங்களது குத்தகைதாரர்களின் குடிநுழைவு ஆவணங்கள் செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

Comments