கிளாந்தான் மாநில சுல்தான் ஐந்தாம் முகம்மது அவர்களின் 57-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று இஸ்தானா பாலாய் பெசாரில் நடைபெற்ற பிரம்மாண்ட அரச விருதுகள் வழங்கும் நிகழ்வில், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், விருதுப் பெறுநர்களின் முன்னணி பட்டியலில் இடம்பெற்று, மாநிலத்தின் முதல் நிலை உயரிய ‘செரி படுக்கா ஜிவா மகோத்தா கிளாந்தான்’ (எஸ்.ஜெ.எம்.கே) எனும் உயரிய ‘டத்தோ’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
1925 ஆம் ஆண்டு சுல்தான் இஸ்மாயில் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘எஸ்.ஜெ.எம்.கே’ விருது, கிளாந்தான் மாநிலத்தின் மிக உயரிய – மதிப்புமிக்க அரச கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விருதைப் பெற்றவர்களுக்கு ‘டத்தோ’ பட்டம் வழங்கப்படுவதுடன், ஒரே நேரத்தில் 50 பேருக்கு மட்டுமே இந்த விருதை வழங்க முடியும் என்ற வரம்பும் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், ‘எஸ்.ஜெ.எம்.கே’ விருது அறிமுகப்படுத்தப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய சமூகத்தைச் சேர்ந்த முதல் நபராக டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இந்த உயரிய கௌரவத்தைப் பெற்றிருப்பது கிளாந்தான் மாநில விருது வரலாற்றில் புதிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான அரச விருதுகள், பதக்கங்கள் வழங்கும் நிகழ்வில் மொத்தம் 767 பேர் கௌரவிக்கப்பட்டனர். அவர்களில் 45 பேருக்கு ‘டத்தோ’ பட்டம் வழங்கப்பட்டது. அரசியல், நிர்வாகம், பாதுகாப்பு, கல்வி, தொழில்துறை, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு மாநிலத்தின் உயரிய அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன.
‘எஸ்.ஜெ.எம்.கே’ விருதைப் பெற்ற மற்ற முக்கிய பிரமுகர்களில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசூத்தியோன் இஸ்மாயில், சில்க்வே குழுமத்தின் நிர்வாகத் தலைவர் டத்தோ டானியார் கெசிக்வ்பெவ், லு மெர்சியர்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ லியோன் எமில் லெ’மெர்சியர் ஆகியோரும் இடம்பெற்றனர்.
மேலும், மலேசிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ மலேக் ரசாக் சுலைமான், இராணுவத் தளபதி ஜெனரல் டான் ஸ்ரீ அஜான் எம்.டி. ஒத்மான் உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் மாநிலத்தின் பல்வேறு உயரிய விருதுகளால் கௌரவிக்கப்பட்டனர்.
விருதைப் பெற்ற பின்னர், சுல்தான் ஐந்தாம் முகம்மது அவர்களுக்கு டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தனது ஆழ்ந்த நன்றியையும் விசுவாசத்தையும் தெரிவித்தார். இந்த அங்கீகாரம் தனிப்பட்ட பெருமை மட்டுமல்லாது, மன்னர், மக்கள், நாட்டிற்கான சேவையை மேலும் அர்ப்பணிப்புடன் தொடர வேண்டிய பொறுப்பையும் தமக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.