Offline
Menu
SKVE நெடுஞ்சாலையில் லோரியிலிருந்து விழுந்து நொறுங்கிய 200 கிலோ எடையுள்ள அமிலத் பீப்பாய்கள்
By Administrator
Published on 10/02/2026 15:00
News
தெலோக் பாங்லிமா காராங் தீயணைப்புப் படை அதிரடி நடவடிக்கை

கோலா லங்காட்:

தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையில் (SKVE) இருந்து மேற்கு கடற்கரை அதிவேக நெடுஞ்சாலைக்கு (WCE) செல்லும் பகுதியில், லோரி ஒன்றிலிருந்து சுமார் 30 மீட்டர் தூரத்திற்கு ‘ஜிங்க் ஆக்சைடு’ (Zinc Oxide) எனும் அபாயகரமான இரசாயனம் சிந்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இன்று காலை 8.07 மணியளவில் இச்சம்பவம் குறித்து அவசர அழைப்பு பெறப்பட்டதைத் தொடர்ந்து, தெலோக் பாங்லிமா காராங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 12 அதிகாரிகள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

 

“120 இரசாயன பீப்பாய்களை ஏற்றி வந்த லோரி, வளைவு ஒன்றில் திரும்பியபோது அதன் பூட்டு எதிர்பாராதவிதமாகத் திறந்து கொண்டது. இதனால் லோரியிலிருந்த பீப்பாய்கள் சாலையில் விழுந்து உடைந்தன. தலா 200 கிலோ எடைக் கொண்ட ஒவ்வொரு பீப்பாயிலும் 50 சதவீதச் செறிவுள்ள ‘ஜிங்க் ஆக்சைடு’ அமில ரசாயனம் இருந்ததாக” சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) உதவி இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் கூறினார்.

 

சாலையில் சிந்திய இரசாயனம் அருகில் இருந்த வடிகாலுக்குள் பாய்ந்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் உடனடியாகத் தடுப்புகளை ஏற்படுத்தி இரசாயனம் மேலும் பரவாமல் தடுத்தனர்.

 

இதனைத் தொடர்ந்து, சா ஆலாம் தீயணைப்பு நிலையத்திலிருந்து அபாயகரமான இரசாயனக் கழிவுகளைக் கையாளும் ‘ஹஸ்மட்’ (Hazmat) சிறப்பு மீட்ப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, சிந்திய இரசாயனத்தை அகற்றும் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.

Comments