Offline
Menu
வீட்டை விட்டு வெளியேறி மாயமான இரு இளம் சகோதரிகள்
By Administrator
Published on 10/02/2026 17:00
News
அம்பாங் ஜெயா

சிலாங்கூர், அம்பாங் ஜெயா லெம்பா ஜெயா உத்தாரா பகுதியில் தங்களது வீட்டில் இருந்து கடந்த செப்டம்பர் 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் தனித்தனியாக வெளியேறி வீடு திரும்பாத இரு இளம் சகோதரிகளைத் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

காணாமல் போனவர்கள் 17 வயதான சியானா குர்ராத்து ஐனி சுல்ஹாஸ்மி மற்றும் அவரது 16 வயது தங்கை நூர் கிஸ்தினா பதானா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

“முதற்கட்ட விசாரணையின்படி, மூத்த மகள் சியானா கடந்த செப்டம்பர் 26 அன்று இரவு நண்பருடன் உணவருந்தச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 27 காலை தனது தாயிடம் பள்ளிக் கொண்டாட்டத்திற்குச் செல்வதாகக் கூறிச் சென்ற இளைய மகள் நூர் கிஸ்தினாவும் வீடு திரும்பவில்லை. அதிக சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் எனத் தாயார் சந்தேகிக்கிறார்” என்று, அம்பாங் ஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் கைருல் அனுவார் காலிட் கூறினார்.

 

காணாமல் போன மூத்த சகோதரி சியானா 159 செ.மீ உயரமும், 45 கிலோ எடையும், வெளுத்த நிறத் தோற்றமும் கொண்டவர். இளைய சகோதரி நூர் கிஸ்தினா 155 செ.மீ உயரமும், 45 கிலோ எடையும், மாநிறத் தோற்றமும் கொண்டவர். இருவரும் கடைசியாக லெம்பா ஜெயா உத்தாரா பகுதியில் காணப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் குறித்த ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அல்லது அம்பாங் ஜாயா மாவட்டக் காவல் தலைமையகத்தின் இயக்க அறை எண்ணையான 03-42897222 அல்லது விசாரணை அதிகாரி சார்ஜென்ட் மேஜர் அஃபிசா ஜைனல் அவர்களை 017-2185192 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments