இந்தோனேசியாவின் சும்பாவா பிராந்தியத்தில் இன்று காலை 6.55 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் தெற்கு அட்சரேகை 9.7 டிகிரி மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 118.9 டிகிரியில் ஏற்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
“நிலநடுக்கத்தின் மையப்பகுதி இந்தோனேசியாவின் பிமா நகருக்குத் தெற்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 87 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு எந்தவிதச் சுனாமி அச்சுறுத்தலும் இல்லை” என்று, மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடல் அலைகளில் பேரழிவு மாற்றங்கள் ஏதும் பதிவாகாததால், ஆசியப் பிராந்தியப் பகுதிகளுக்கோ அல்லது மலேசியக் கடலோரப் பகுதிகளுக்கோ சுனாமி எச்சரிக்கை எதுவும் எழுப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நிலநடுக்கத்தின் தொடர் அதிர்வுகள் குறித்த நிலவரங்களை இந்தோனேசிய மற்றும் மலேசியப் பேரிடர் மேலாண்மை அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.