கடமையின்போது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வன்முறையான தாக்குதல்களை எதிர்கொண்டால், துப்பாக்கியைப் பயன்படுத்தத் தயங்க வேண்டாம் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் அதிகாரிகளுக்கு அதிரடி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். கெப்போங்கில் போலீஸ் அதிகாரி ஒருவரின் வலது கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
“எப்போதும் தயாராக இருங்கள். ஆயுதத்தை எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். தயாராகுங்கள், துப்பாக்கியை எடுங்கள், சுடுங்கள். எதிர்ப்பு ஏற்பட்டால் சுடுங்கள். சந்தேகம் ஏற்பட்டாலும் சுடுங்கள். அச்சுறுத்தல் இருந்தால் காத்திருக்க வேண்டாம்” என அதிகாரிகளுக்கான நடவடிக்கை தொடர்பான உரையில் அவர் தெரிவித்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் போலீசார் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உடனடியாகச் செயல்பட வேண்டும் என்பதையே அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கெப்போங், டேசா அமான் புரி அடுக்குமாடிக் குடியிருப்பில் வெளிநாட்டவர் ஒருவர் ஆக்ரோஷமாக நடந்துகொள்வதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, போலீசார், தீயணைப்புப் படையினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைய முயன்றபோது, இரண்டு பாராங் கத்திகளுடன் சந்தேக நபர் திடீரெனத் தாக்கியதில், 26 வயதான போலீஸ் அதிகாரியின் வலது கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்டதுடன் தலை மற்றும் உடற்பகுதிகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும் சில மீட்புப் பணியாளர்களும் காயமடைந்தனர்.
தாக்குதலுக்குப் பின்னர் தப்பியோடிய சந்தேக நபர், சுமார் நான்கு மணிநேரங்களுக்குப் பிறகு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் சுற்றிவளைக்கப்பட்டார்.
அப்போது மீண்டும் கத்தியால் தாக்க முயன்றதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுக் காயமடைந்த சந்தேக நபர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.
இதனிடையே, காயமடைந்த போலீஸ் அதிகாரி முதலில் செலாயாங் மருத்துவமனைக்கும் பின்னர் கோலாலம்பூர் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டு, துண்டிக்கப்பட்ட கைக்குச் சிறப்பு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.