கெப்போங்கில் பாராங் கத்தியால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் வலது கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட 26 வயது போலீஸ் அதிகாரியின் கை, கோலாலம்பூர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அவசர அறுவைச் சிகிச்சையின் மூலம் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சியைத் தொடர்ந்து இன்று காலை 8.40 மணியளவில் அறுவைச் சிகிச்சை நிறைவடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று மாலை கெப்போங், டேசா அமான் புரி பகுதியில் வெளிநாட்டவர் ஒருவர் ஆக்ரோஷமாக நடந்துகொள்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, போலீசார், தீயணைப்புப் படையினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது இரண்டு பாராங் கத்திகளுடன் சந்தேக நபர் திடீரெனத் தாக்கியதில், கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரியின் வலது கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்டதுடன் தலை மற்றும் உடற்பகுதிகளிலும் காயங்கள் ஏற்பட்டன.
தாக்குதலுக்குப் பின்னர் தப்பியோடிய சந்தேக நபர், இரவு 8 மணியளவில் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரைக் கைது செய்ய முயன்றபோது மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றதாகவும், இதனால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுக் காயமடைந்த சந்தேக நபர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.
இதனிடையே, காயமடைந்த போலீஸ் அதிகாரி முதலில் செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், மேலதிக அறுவைச் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு துண்டிக்கப்பட்ட கை மீண்டும் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் செயல்பாடு முழுமையாக மீளுமா என்பது தொடர்பான மேலதிக மருத்துவக் கண்காணிப்பு அவசியமாகும்.