சட்டவிரோத பணப் பரிமாற்ற நடவடிக்கைகளுக்குத் தனது நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்த 32 வயது நிறுவன உரிமையாளருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று RM100,000 அபராதம் விதித்துள்ளது.
இயந்திரப் பராமரிப்பு நிறுவன உரிமையாளரான கோங் சோன் டின் (Kong Chon Tin), தமக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி முகமது இல்மாமி அஹ்மட் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அதற்குப் பதிலாக 36 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் 2 மற்றும் 3ஆம் தேதிகளில், கோலாலம்பூர் ஜாலான் கிள்ளான் லாமாவில் உள்ள வங்கிக் கிளையில், SKD Technology & Service மற்றும் Akita Machinery & Service ஆகிய இரண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மூலம் மொத்தம் RM190,000 சட்டவிரோத பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விவரங்களின்படி, சூதாட்ட நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்பட்ட பணத்தைத் தனது நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் பெற்றுக்கொள்ள மற்றொருவருக்கு கோங் அனுமதி வழங்கியுள்ளார்.
இதற்குப் பதிலாக, கணக்குகளில் செலுத்தப்படும் ஒவ்வொரு தொகையிலிருந்தும் 5 விழுக்காடு கமிஷன் வழங்கப்படும் என அவருக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இந்த ஏற்பாட்டின் மூலம் இரண்டு வங்கிக் கணக்குகளிலும் RM190,000 பணம் செலுத்தப்பட்டதற்கு அவர் உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
வங்கிக் கணக்குகளை இவ்வாறு தவறாகப் பயன்படுத்துவது பொதுமக்களின் நம்பிக்கையையும் நாட்டின் வங்கி அமைப்பின் பாதுகாப்பையும் பாதிக்கும் கடுமையான குற்றம் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷுகோர் அபு பக்கார் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.
எனினும், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் இல்லாததையும், குடும்பப் பொறுப்புகள் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையைப் பராமரித்து வருவதையும் கருத்தில் கொண்டு அபராதம் விதிக்குமாறு அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தார்.
குற்றவியல் சட்டத்தின் 424C(1) பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, RM10,000 முதல் RM150,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.