பேராக் மாநிலம் லுமுட்டில் உள்ள மதானி எஸ்பிளனேட் விங் பொழுதுபோக்குப் பூங்காவின் கரையோரத் தடுப்புச் சுவரில் பிரம்மாண்ட எண்ணெய்க் கப்பல் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை சுமார் 9.50 மணியளவில் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், கப்பலுக்கும் கரையோரத் தடுப்புச் சுவருக்கும் சேதம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
விபத்துக்குள்ளான கப்பல் சரக்குகள் ஏற்றப்படாத நிலையில் இருந்ததாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி கடல் சோதனைப் பயணத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என மஞ்சோங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
83 மீட்டர் நீளமும் 2,400 டன் எடையும் கொண்ட இந்தக் கப்பலில் தாய்லாந்தைச் சேர்ந்த 10 பணியாளர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக Fuji என்ற பெயரில் இயங்கி வந்த இந்தக் கப்பல், பின்னர் தாய்லாந்தைச் சேர்ந்த புதிய உரிமையாளருக்கு மாற்றப்பட்டு, Midas என்ற பெயரில் மீண்டும் பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
கடல்சார் துறையிடமிருந்து கிடைத்த ஆரம்பகட்டத் தகவல்களின்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆரம்ப ஆய்வுக்கான அனுமதியைப் பெறாமலேயே முந்தைய இரவு கப்பல் சோதனைப் பயணத்திற்குப் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கப்பலின் பதிவுச் சான்றிதழ்கள், இயக்க அனுமதிகள் மற்றும் பயணப் பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
விசாரணைகள் நிறைவடையும் வரை, கடல் அலை மற்றும் நீர்மட்ட நிலைமைகளைக் கருத்தில் கொண்டு கப்பலைப் பாதுகாப்பான இடத்தில் தற்காலிகமாக நங்கூரமிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் மஞ்சோங் காவல்துறையை 05-688 6222 என்ற எண்ணிலோ அல்லது 017-682 8005 என்ற WhatsApp எண்ணிலோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.