பேராக் மாநிலம், ஈப்போவில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், ஜாலான் பெர்சியாரான் லெம்பா பெர்பாடுவான் (Jalan Persiaran Lembah Perpaduan) பகுதியில் ஒரு வாகனத்தை நிறுத்தியபோது, அதிலிருந்து இறங்கிய சந்தேக நபர் தப்பிச் செல்ல முயன்றதாக, அத்துறையின் இயக்குநர் எம். குமார் தெரிவித்தார்.
அந்தச் சந்தேக நபர் காவல்துறையினரை நோக்கித் துப்பாக்கியால் பலமுறை சுட்டார். அதற்குப் பதிலடியாக, தற்காப்புக்காகக் காவல்துறையினரும் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களது பாதுகாப்பிற்கு இருந்த அச்சுறுத்தல் நீங்கும் வரை இந்தச் சூழல் நீடித்தது. மலேசியரான அந்தச் சந்தேக நபர், அதிகாலை 3.40 மணியளவில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அருகில் ஒரு கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது என்று குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 307-ன் கீழ் (கொலை முயற்சி) மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவு 3இன் கீழ் (ஒருவரை காயப்படுத்தும் அல்லது கொல்லும் நோக்கத்துடன் துப்பாக்கியைப் பயன்படுத்துதல்) வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால், இது குறித்து பொதுமக்கள் எந்தவிதமான ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்று குமார் கேட்டுக்கொண்டார். மேலும், இன்று பிற்பகல் 3 மணிக்கு பேராக் மாநில காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும், அதில் இந்தச் சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.