Offline
Menu
குடிநுழைவுத் துறையைச் சேர்ந்த 36 அதிகாரிகள் மீது நடவடிக்கை!
By Administrator
Published on 11/20/2026 11:00
News
போலி விசா வழங்கும் மோசடி கும்பலுடன் தொடர்பு!

மலேசியாவில் போலி மருத்துவ அனுமதிச் சீட்டுகள் மற்றும் தற்காலிக வேலை அனுமதிச் சீட்டுகளை (PLKS) வழங்கும் மோசடி கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், குடிநுழைவுத் துறையைச் சேர்ந்த 36 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

2025ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டின் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் துணை உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.

 

சம்பந்தப்பட்ட 36 பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது இதனைத் தெரிவித்த அவர், அரசாங்க அதிகாரிகளின் நேர்மை மற்றும் ஊழல் தொடர்பான விவகாரங்களில் உள்துறை அமைச்சு எந்தவித சமரசமும் செய்யாது என்று வலியுறுத்தினார்.

 

குடிநுழைவுத் துறைக்குள் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் (MACC) இணைந்து பல சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

இதனிடையே, தற்காலிக வேலை அனுமதிச் சீட்டு வழங்கும் நடைமுறையை முழுமையாக மின்னிலக்கமயமாக்கியதன் மூலம் போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவது கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

புதிய மின்னணு தற்காலிக வேலை அனுமதிச் சீட்டு (ePLKS) முறையில், முன்பு பயன்படுத்தப்பட்ட ஒட்டுவில்லைகள் நீக்கப்பட்டு, பயோமெட்ரிக் அடையாளச் சரிபார்ப்பு மற்றும் QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதன் விளைவாக, 2026ஆம் ஆண்டில் போலி அனுமதி ஒட்டுவில்லைகள் தயாரிக்கப்படுவது ஏறக்குறைய 90 விழுக்காடு குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட குடிநுழைவுத் துறை சோதனைகளில் 35,109 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அதே காலகட்டத்தில் நுழைவாயில்கள் மற்றும் போலீசார் உள்ளிட்ட பிற அமலாக்க அமைப்புகள் மூலம் மேலும் 22,495 வெளிநாட்டவர்கள் குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Comments