Offline
பாகிஸ்தான்: வீரர்களை கொல்ல காரில் வைத்த வெடிகுண்டு வெடித்து பயங்கரவாதிகள் பலி
Published on 11/16/2024 01:58
News

பெஷாவர்,பாகிஸ்தான் நாட்டின் பக்துன்குவா மாகாணத்தில் மீர் அலி நகரில் இன்று அதிகாலை ரசூல் ஜன் என்பவர் அவருடைய வீட்டில் காரில் வெடிகுண்டு ஒன்றை பொருத்தியிருக்கிறார். அப்போது, திடீரென அந்த வெடிகுண்டு வெடித்தது. இதில், அந்த வீடு, கார் முழுவதும் சேதமடைந்தது.

இந்த சம்பவத்தில் 5 பயங்கரவாதிகள் பலியானார்கள். இதுதவிர, இடிந்த வீட்டின் இடிபாடுகளில் இருந்து 2 குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டன. இதனால், உயிரிழப்பு 7 ஆக உள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்ததில், அருகேயிருந்த பல்வேறு வீடுகளும் சேதமடைந்தன. இதில் பெண்கள் உள்பட 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.

ரசூல், அந்த பகுதியில் பாகிஸ்தானிய தலீபானின் தளபதியாக செயல்பட்டு வந்திருக்கிறார். இவர்கள், பாதுகாப்பு படையினரை இலக்காக கொண்டு துப்பாக்கிகள், ராக்கெட்டுகள், எறிகுண்டுகள் மற்றும் தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதல்கள் போன்றவற்றில் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று, மாகாணத்தின் சர்சட்டா மாவட்டத்தில் யாருமில்லாத சாலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்று கொண்டிருந்த தற்கொலை வெடிகுண்டு பயங்கரவாதி ஒருவர், இலக்கிற்கு முன்பாகவே வெடிகுண்டை வெடிக்க செய்து விட்டார். இதில் அவர் பலியானார். வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை என போலீஸார் தெரிவித்தனர்.

Comments