குவா மூசாங்: கெடசார் சாலில் தேசியப் பள்ளி வளாகத்திற்குள் காட்டு யானைகள் கூட்டமாக நுழைந்ததால் ஆசிரியர்களும், குடியிருப்பாளர்களும் அச்சமடைந்துள்ளனர். மூன்று காட்டு யானைகள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். கெடசார் சாலில் நில மேம்பாட்டுத் திட்டத்தைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் யானைகளின் அடிக்கடி வருகையால் அச்சத்தில் உள்ளனர் என்று பெற்றோர்-ஆசிரியர் சங்க துணைத் தலைவர் கூறினார். யானைகள் கிராமத்திற்குள் 10 முறைக்கு மேல் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளன.
நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆசிரியர் குடியிருப்புப் பகுதியில் நுழைந்து வேலிகள், தென்னை மரங்கள், பனை மரங்கள், வாழை மரங்களை சேதப்படுத்தின. காலை 6.30 மணி வரை யானைகள் பள்ளி வளாகத்தில் இருந்தன. இதனால் குழந்தைகளை பள்ளியில் விடும் பெற்றோர்கள் அச்சமடைந்தனர். வனவிலங்குத் துறையினர் யானைகளை இடமாற்றம் செய்ய உதவ வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு யானைகள் மீண்டும் வரக்கூடும் என்று மக்கள் கவலைப்படுகின்றனர். புகார்கள் வந்துள்ளதாக வனவிலங்கு இயக்குனர் உறுதிப்படுத்தினார்.